ஆன்மிகத்தில் அனாதைகள்

Published : 2016-03-19 04:25:00 | Author : சக்தி மு. சுந்தரேசன், M.A., M.Phil.,

20 நிமிடம் அருள்வாக்கு
மாசி மாத அமாவாசை அபிடேகத்திற்குக் காணிக்கை செலுத்தி உபயதாரராக நானும் கலந்து கொண்டேன். அபிடேகதாரர் என்ற முறையில் எனக்கு அருள் வாக்குக் கிடைத்தது. சுமார் 20 நிமிடம் எனக்கு அருள் வாக்கு சொன்னாள் அம்மா! “உனக்கு ஒரு பொறுப்பு தரப்போகிறேன். தோல் வியாதிக்கு எலுமிச்சம் பழத் தோலை உடம்பில் தேய்த்துக் கொண்டு வா!” என்ற இந்த இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எந்த விஷயமும் மனத்தில் நிற்கவில்லை. ஆன்மா பற்றிச் சொன்னாள் , மரணம் பற்றிச் சொன்னாள் , உயிர்த் தத்துவம் பற்றிச் சொன்னாள் . மாயைப் பற்றிச் சொன்னாள் . தத்துவ மழையாகப் பொழிந்து தள்ளினாள் .

“நான் சொன்னதெல்லாம் புரிஞ்சுதாடா? மண்டையில் ஏறியதாடா? உத்தரவு!” என்று சொல்லி அனுப்பிவிட்டாள் . புற்று மண்டபத்தை விட்டு வெளியே வந்து நினைத்துப் பார்க்கிறேன். எதுவும் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. புருவமத்தியில் விரல் வைத்துத் தேய்த்துத் தேய்த்துப் பார்க்கிறேன். ஊகும்! எந்த விஷயமும் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. ச்சே.... என்று என் மேலேயே எனக்கு வெறுப்பு வந்தது.

“யோவ்! 20 நிமிடம் அம்மா உன்னிடம் பேசிச்சு! என்னய்யா பேசிச்சு? சொந்த விஷயங்களாக இருந்தால் வேண்டாம். பொதுவான விஷயங்கள் இருந்தால் சொல்லு! என்று நண்பர்கள் துளைத்தெடுத்தார்கள் . அம்மா தத்துவ மழையாகப் பொழிந்து தள்ளினாள் யா! எதுவும் மனசிலே தங்கவில்லை! சொன்னால் நம்பு! என்றேன். யாரும் நம்பத் தயாராக இல்லை. இவன் மறைக்கிறான் என்றே கருதிக் கொண்டார்கள் .

மனிதனின் சிற்றறிவு
எம்.ஏ பட்டம் வாங்கிப் பயன் என்ன? எம்.ஃபில் பட்டம் வாங்கிப் பயன் என்ன? தொல்காப்பியம் சேனாவரையர் உரை படித்துப் பயன் என்ன? சைவ சித்தாந்தம் படித்துப் பயன் என்ன? வேதாந்தம் படித்துப் பயன் என்ன? உபநிடத நூல்களையெல்லாம் படித்துப் பார்த்தேன். ஆழ்ந்து படிக்கவில்லையென்றாலும் அவற்றின் சாரத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. மூளையைக் கசக்கிக் கொண்டு படித்துப் பார்த்தும் எனது மண்டையில் ஏறாத உபநிடதம் ஒன்று இருந்தது. அது என்ன தெரியுமா? மாண்டூக்கிய உபநிடதம்.

அம்மா தமிழில்தானே அவ்வளவும் சொன்னாள் ? எதுவும் பதியவில்லையே எனத் தவித்தேன்! தவித்தேன்! அப்படித் தவித்தேன். போடா மரமண்டை! என்று சொல்லாமல் உன் மண்டையில் ஏறியதாடா? என்று மட்டும் கேட்டு அனுப்பிவிட்டாள் .

இது குறித்துப் பல நண்பர்களிடம் புலம்பித் தீர்த்தேன்.
“ஏம்பா...? இவனுக்கு எதுவும் ஏறாது என்று தெரியுமல்லவா?
அப்படியிருந்தும் 20 நிமிடம் ஏன் வீண் செலவு பண்ணினாள் ?” என்று என் ஆற்றாமையைக் கொட்டினேன். ஒருநாள் எனக்குச் சாதகமான பதில் கிடைத்தது.

அம்மா சொன்னது புரியலையே... புரியலையே என்று அப்படித் தவித்தீர்களே... இதோ இவரிடம் கேளுங்கள் ! உங்களுக்கு இவர் பதில் சொல்வார் என்று ஒருவரை அறிமுகப்படுத்தினார் என் நண்பர். அவர் சொன்னார், “ஆமாம் சார்! எனக்கும் அம்மா அருள் வாக்கு கிடச்சது. ரொம்ப நேரமா தத்துவ மழையாகக் கொட்டினா? உத்தரவு என்று சொல்லி முடித்து விட்டா... அம்மா! நீ சொன்னது எதுவும் எனக்கு விளங்கலையே...” என்றேன்.

மூச்சுக்காற்று பட்டதே போதும்

அம்மா சொன்னா... “பரவாயில்லே... இவ்வளவு நேரமும் என் மூச்சுக் காற்று உன் மேல் பட்டது இல்லே...? அது போதும்! போய் வா... என்றாள்

சார்!” என்றார்.

அம்மாவின் - ஆதிபராசக்தியின் மூச்சுக்காற்று படுவது சாதாரண விஷயம் அல்லவே...!

இன்னொரு தொண்டர் அனுபவம்

ஒரு தொண்டர் அருள் வாக்குக் கேட்கப் போனார். அம்மா எதிரில் ஒரு முழ தூரத்துக்கு மேல் எட்டி உட்கார்ந்த அவரைப் பார்த்து, கிட்டவாடா! என்றாளாம். கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தார். இன்னும் கிட்ட வாடா! என்றாள் . இன்னும் சற்று நெருங்கி உட்கார்ந்தார்.


அம்மா நன்றாக மூச்சை இழுத்துவிட்டு “என் மூச்சுக்காற்று உன் மேல் படவேண்டும்! அதற்குத்தான் நெருங்கி உட்காரச் சொன்னேன். போய்வா! உத்தரவு! என்று சொல்லி அனுப்பிவிட்டாளாம். அவரே சொன்னார்.


அம்மா நன்றாக மூச்சை இழுத்துவிட்டு “என் மூச்சுக்காற்று உன் மேல் படவேண்டும்! அதற்குத்தான் நெருங்கி உட்காரச் சொன்னேன். போய்வா! உத்தரவு! என்று சொல்லி அனுப்பிவிட்டாளாம். அவரே சொன்னார்.

அடிகளார் மூச்சு
இளைஞர் ஒருவர் நம் அம்மா வீட்டில் சென்று ஏவல் கூவலுக்குப் பணி செய்து வருவார். அவரிடம் அருள் வாக்கில் அம்மா ஒரு உளவு சொல்லிக் கொடுத்தாள் . “மகனே! அடிகளாரோடு நெருங்கிப் பழகும் பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறது! அடிகளாரின் மூச்சுக் காற்று உன் மேல் படுமாறு பார்த்துக் கொள்ளடா!” என்றாளாம். அவரே என்னிடம் இதனைச் சொன்னார். மூச்சுக் காற்றுக்கு அப்படி என்ன சார் விசேஷம்? என்று கேட்டார். அப்போது அதன் மகிமை பற்றிச் சொல்ல எனக்குத் தெரியவில்லை.

பிராணாயாமம்
யோக சாத்திரத்தில், பிராணாயாமம் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. வீட்டில் பூஜை செய்கிறவன் பூஜைக்கு முன் மந்திர ஜெபம் செய்கிறவன் கொஞ்சம் பிராணாயாமம் செய்துவிட்டு ஜெபத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பது விதி! சந்தியாவந்தனம் செய்கிற ஒருவன், பிராணாயாமம் செய்துவிட்டுக் காயத்திரி மந்திரத்தைச் சொல்ல வேண்டும். என்று சொல்லப்பட்டுள்ளது.

மூச்சுப் பயிற்சி
பிராணாயாமம் என்பது ஒரு மூச்சுப் பயிற்சி...! இவ்வளவு பீடிகையும் எதற்கு? பாவங்கள் நீக்கிக் கொள்ள பிராணாயாமம் என்கிற மூச்சுப் பயிற்சி உதவுகிறது. பிராயச்சித்தங்களில் காயத்திரி மந்திரஜபம் போல, இந்த மூச்சுப் பயிற்சியான பிராணாயாமமும் ஒரு வழி! இதைச் சொல்வதற்குத்தான் இவ்வளவு முன்னுரை...! அம்மா ஒரு தொண்டரிடம் சொன்னார்கள் . “நீ விடுகிற மூச்சை வைத்தே நீ யார்? உன் தன்மை என்ன? உன் வரலாறு என்ன? என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லி விடலாம். அதற்குச் சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மண்டையில் சளி சேரக்கூடாது. வயிற்றில் மலம் சேரக்கூடாது” என்றார்கள் . இந்து மதத்தில் உன்னதமான விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. வெளிநாட்டார்கள் அவற்றை வியந்து பாராட்டுகிறார்கள் . இந்து மதத்தில் ஒரே ஒரு களங்கம் என நான் நினைப்பது வருணாசிரம தர்மம் என்ற சாதிப் பாகுபாடு! இந்த ஒன்றை வைத்துத்தான் அறிவு ஜீவிகள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் இந்து மதத்தைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள்.

பிராணாயாமமும் - பிராயச்சித்தமும்
மூச்சுப் பயிற்சியினால் மனத்தைக் கட்டுப்படுத்தலாம். எண்ணங்களைச் சீராக்கிக் கொள்ளலாம். பழம் பிறவிகளில் சேர்த்துக் கொண்ட பாவங்களை எரித்துக் கொள்ளலாம் என்று நம் நாட்டு யோகிகள் சொல்லிச் சென்றனர்.


“நீ விடுகிற மூச்சுக் காற்றுக்கும் உன் மனத்துக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு” என்ற ஆன்மிக உண்மையைக் கண்டுபிடித்துச் சொன்னவன் நம் நாட்டுச் சித்தன். “மண் மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மண்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” - என்கிறார் திருமூலர்


“நீ விடுகிற மூச்சுக் காற்றுக்கும் உன் மனத்துக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு” என்ற ஆன்மிக உண்மையைக் கண்டுபிடித்துச் சொன்னவன் நம் நாட்டுச் சித்தன். “மண் மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மண்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” - என்கிறார் திருமூலர். பிராணன் என்பது பிரபஞ்சத்தின் உயிர்ச் சக்தி. மின் சக்தி போல, காந்த சக்தி போல, ஆத்ம சக்தி போல அது உயிர்ச் சக்தி. (Life energy) பின்னால் வந்தவர்கள் பிராணன் என்பதற்கு வெறும் மூச்சுக் காற்று என்று அர்த்தம் செய்து கொண்டனர் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

அந்தப் பிராண சக்திதான் பத்து வாயுக்களாக நமது உடம்பை இயக்குகிறது. வாயுக்கள் என்று அவற்றைக் குறிப்பிடுவார்கள் . அவை. 1. பிராணன், 2. அபானன், 3. சமானன், 4. வியானன், 5. உதானன், 6. நாகன், 7. கூர்மன், 8. கிங்கரன், 9. தேவதத்தன், 10. தனஞ்செயன்.

மூச்சுக் கணக்கு
நாம் ஒரு நாளைக்கு 21600 தடவை மூச்சு விடுகிறோம். அந்த மூச்சுக் காற்று 12 அங்குலம் கொண்டது. இதில் 7200 சுவாசம் வீணாகப் போகிறது. 14,400 சுவாசமே உள் ளே புகுகிறது. இம்மூச்சு வீணாகப் போகாமல் தடுப்பதால் நம் ஆயுள் கூடும்.
உள் ளே இழுக்கும் மூச்சுக்கு பூரகம் என்று பெயர். மூச்சை அடக்குவது கும்பகம் எனப்படும். வெளியே விடுவது ரேசகம் எனப்படும்.

பூஜைக்கு முன்பாக மூச்சை உள்ளே இழுத்து, உள்ளே நிறுத்த வேண்டும். பின் மூச்சை வெளியே விட வேண்டும். இதுபோல ஒவ்வொரு முறை இழுத்தும், உள்ளே நிறுத்தியும் பின் வெளிவிட்டும் பயிற்சி செய்ய வேண்டும்.